Wednesday, February 27, 2013

பெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்??

நண்பர்களுக்கு வணக்கம்..

முகநூளில் நான் மூழ்கி இருந்த நேரத்தில் கடந்து வந்த செய்தி ஒன்றை பார்த்து அதிர்ந்து தான் போனேன்.தொடர்ந்து இது போன்ற செய்திகள் நடக்கையில் பெண் இனத்தின் மீது ஒரு பெண்ணுக்கே கடுங்கோபம் வருகிறது.

நான் படித்தச்  செய்தி பின்வருமாறு..


கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமிர்தா.இவர் கராத்தேவில் நன்கு பயிற்சிபெற்றவர்.சிலதினங்களுக்கு முன்பு இவர் தனது பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.அப்போது அங்கு கார்பார்க்கிங் செய்வதில் அவருடைய பெற்றோருக்கும் இரு இளைஞர்களையே சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.


இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் ஒருவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னை விவகாரமாக உருவெடுக்க அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை மூன்றுபேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்க்கு எதிர்ப்புதெரிவித்தபோது அவர்கள் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் தற்க்காப்பிற்க்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்தார்.

சும்மா இருந்த வாய்க்கு அவில் கிடைக்க சில ஊடகங்கள் அந்த பெண்மணியை போற்றியும் அந்த சராசரி இளைஞர்களை காமக் கொடூரர்களாக வர்ணித்தும் எழுதி அதன் விளைவாக பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இழந்திருக்கிறார்கள்.இது தான் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதோ??

கோபம் வந்த சில இளைஞர்களின் முயற்சியால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு , அமிர்தாவின் பக்கமே தவறு இருக்கிறது என்று அவர் மீது வழக்கு தொடர உத்தரவிடப் பட்டிருக்கிறது .கொடுமை, நல்ல தீர்ப்பை சொல்லியதன் பலனாய்  அந்த நீதிபதியும் இடம் மாற்றப் பட்டிருக்கிறார்.

கட்டட்ட சுதந்திரத்தில் கருத்து கூறுகிறேன் என்ற பெயரில்  கண்டதை சமூக வலைத்தளத்தில் எழுதி அதற்கு வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அதன் விளைவாய் ஒரு இளைஞனை இதே பாணியில் மாட்டிவிட்ட நம்ம அக்கா பாடகி சின்மயி பத்தியும் எல்லாரும் படிச்சிருப்பிங்க.

பிரபலம் என்ற போர்வையில் அமர்ந்திருக்கும் பெண்கள் மட்டும் தான் இதை செய்கிறார்கள் என்றில்லை.ஒரு சில சாராசரி பெண்களும் தான்.இவை எங்கேனும் ஒரு மூளையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.


தான் செய்யும் தவறிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ, தனக்கு பிடிக்காத ஆண் மகனை பழி வாங்கவோ, நீங்க ரூம் போட்டு யோசிச்சிங்கனா ஆயிரம் வழிக் கிடைக்கும் சகோதரிகளே .அதை விடுத்து, ஏன் புனிதமான பெண்மையை ஊடகமாக கையில் எடுத்து, அவன் என்னைய கைய புடிச்சு இழுத்தான்,இவன் என்னைய செக்ஸ் டார்ச்சர் செஞ்சான்னு  உங்கள நீங்களே இழிவு படுத்தி பெண்ணினத்தையும் கேவலப் படுத்தறீங்க.

அவ்வாறான பெண்களுக்கு,

1. பெண்மை அல்லது கற்பு எனப்படுவது யாது??? 

2. பெண்ணுரிமை அல்லது பெண்ணடிமைத்  தனம் என்பது யாது??

ஈழத்தில் கொத்து கொத்தாகப்  பெண்களை வேட்டையாடி வீதியில் எறிந்தாலும் கேட்க ஒரு நாதியில்லை.இங்க ஒரு பொட்டபுள்ள கண்ணக் கசச்கிட்டா போதும் நீலிக் கண்ணீரா நிஜக் கண்ணீரான்னு கூடத் தெரியாம பாதிக்கப் பட்டவங்களுக்கு எதிரா உடனடி நடவடிக்கையாமா!!

இந்த ஊடகங்கள் என்று தான் உண்மைக்கு உழைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.உள்ளதை உள்ளபடி எழுதாவிட்டாலும் பரவாயில்லை இல்லாததை இட்டுக் கட்டி எழுதி நீங்கள் பேனாவின் புனிதத்தை கெடுக்காதீர்கள்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம் 
சவுரி யங்கள் பலபல செய்வராம் 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் 
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!!!

நமது முண்டாசுக் கவிஞன் இன்று இருந்திருந்தால்,

புதிய பொய்ம்மைகள் யாவும் கற்பராம்
தூத்தி ஆண்மக்கள் சபித்திட வாழ்வராம் 

என்றல்லவா எழுதியிருப்பார்.நல்ல வேலை இந்த கொடுமைகளைப் பார்த்து நான் சொன்னப்  பெண்விடுதலை இதுவல்ல என்று நெஞ்சுவெடித்து சாவதற்கு அவர் இன்று உயிரோடில்லை.

காலம் உன் குலத்திற்கு எதிராகக் கூட உன்னை எழுத வைத்து விட்டதடி ஆதிரா.


இதை தமிழ்மணத்தில் பரிந்துரையிட்டீர்கள் என்றால் மகிழ்வேன்.


பணிவுடன் ,

ஆதிரா.



Tuesday, February 26, 2013

வேற,எப்படித்தான்டி என் காதலைச் சொல்றது??


கட்டழகியின் கண்களைப் பார்த்து 
காதல் சொன்னால் கடுங்கோபம் 
கொண்டென்னை எரிப்பாயோ??


மனம் பறித்தவளின் முன் 
மண்ணைப் பார்த்து உன்னை
மணமுடிக்க  ஆசை என்றால்
மனதால் கோழை என்பாயோ??


தொடாமல் என்னை தொட்டவளிடம்
தொலைவில் நின்று தொலைபேசியில்
சொன்னால் தொடநடுங்கி என்று
நினைப்பாயோ??


அன்புக்குரியவளின் அருகில் வந்து
அணைத்துச்  சொன்னால் அலைகிறேன்
என்று அறைந்திடுவாயோ??


கவிதையாய் பிறந்தவளுக்கு
காகிதத்தில் கவிபேசி கண்படும்
இடத்தில் வைத்து விட்டால்
கடன் வாங்கிய கவிதை என்று
கிழித்துத்  தான் எறிவாயோ??



இதயம் திருடியவளுக்கு இதயம்
பதித்த வாழ்த்து அட்டையில் என்
இதழ்கள் பதித்து இடையில் ரோஜா
இதழ்கள் இணைத்து உன் முன்
மண்டியிட்டுச் சொன்னால்
சினிமாக் காட்டறான் என்று
சிலுத்துக் கொள்வாயோ??



என்னைக் கேட்காமல் என்னுள்
வந்தவளுக்கு எட்டடி மாடியில்
ஏறி நின்று ஏத்தக் குரலில்
சொன்னால் ஏரெடுத்தும் பார்க்காமல்
பைத்தியம் என்று பட்டம் கட்டிடுவாயோ??

என்னால் சொல்ல முடியாததை
என்னவளுக்கு என் தோழன் மூலம்
தூது விட்டுச் சொன்னால்
காதலுக்கு வைக்கில் வைத்தவனை 
வரச்சொல் என்று வைரமுத்து பானியில்
வஞ்சிடுவாயோ??



மூளையைக்  கசக்கி முழி பிதுங்க 
முயற்சித்தாலும்  ஒரு முடிவுக்கு
மட்டும் வர முடியலடி..
நெஞ்சுக்குள்ள புலுங்கறேன்டி
நித்திரையின்றி தவிக்குறேன்டி
நித்தம் நித்தம் சாவுறேன்டி உன்
நினைப்பில் மட்டும் வாழுறேன்டி..

நீயே சொல்லடி நறுக்குன்னு ஒரு
நல்ல யோசனை எப்படி சொல்லி
புரியவைக்க இந்த புத்திக்கெட்டவனின்
புரியாக் காதலை...

  


Monday, February 18, 2013

எப்படி வளர்கிறது என் காதல்???

மணிகணக்காய் பேசி உன்
மடியில் படுத்து உறங்கி
மார்புச்  சூட்டில் புதைந்து
மீசை முடியை இழுத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

ஓசி வண்டியில் அமர்ந்து
ஒருவருக்கும் தெரியாமல்
ஊரைச் சுற்றி வந்து உன்
கைகள் கோர்த்து கொண்டு
கால்கள் சேர நடந்து
நான் காதல் வளர்க்கவில்லை...

அரை கப் ஐஸ்க்ரீமை 
அரைமணி நேரம் ருசித்து
ஆள் இல்லா தியேட்டர் தேடி
பரிசுப் பொருட்கள் மாற்றி
பார்ப்பதையெல்லாம் கேட்டு உன்
பர்சை காலி செய்து
நான் காதல் வளர்க்கவில்லை...

கண்கவர் உடையில் உன்
கண்ணுக்கு தீனி போட்டு நீ
மென்னு மென்னுத்  தின்ன
மெல்ல மெல்லச்  செத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

சின்னப்  பொய்களுக்கும்
செல்லத்  தவறுகளுக்கும்  உன்
கண்ணம் கிள்ளி காதைத் திருகி
ஊடல் போய் கூடல் வந்து உன்
உதடு பிரியாப்  புன்னகையிலும்
ஓரக்கண் பார்வையிலும்
உயிரைத்  தொலைத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

பிறகு எப்படித்  தான் வளர்கிறது என் காதல்???

காணாத போதும்
கலையாத கனவிது.
அணைக்காத போதும்
அனையாத நெருப்பிது.
உரையாடத போதும்
உறங்காத விழியிது.
எனக்குள் இருப்பவன்
எங்கோ இருக்கிறான்
எனக்காய் இருக்கிறான்
என்னில் அவனும் 
அவனில் நானும் 
வாழும் வரையில்
வளரும் என் காதல்...



Wednesday, February 13, 2013

நாட்டுப் பண்ணையில் சிக்கிய காகிதப் பூக்கள்.

 
 
 
நால்வகைப் பூக்களை நட்டு வைத்து வளர்க்கும்
நாட்டுப் பண்ணை இன்று நர்சரி பள்ளியானது...
 
பால் குடி மறவா எம் பச்சிளம் குழந்தைகள்
புத்தக பொதி சுமந்த பூக்களாயின ..
 
முன்னேரத்திலேயே முழுதாய் தூக்கம் கலையாமல்
மூன்று சக்கர வண்டியில் மூட்டைகளாய்
அடைக்கப்பட்டு ..
 
பின்னேரத்தில் எம் பிஞ்சு பூக்கள்
பிடி விடுபட்ட பட்டாம் பூச்சிகளாய் 
வீடு வந்துச் சேரும் போதும்
வாடுவதே இல்லை..
 
ஆம்!!காகிதப் பூக்கள் எங்ஙனம் வாடும்???







எங்கள் அழகு தேவதை வினோதினி வாயிலாக..


நண்பர்களுக்கு வணக்கம்!

அமிலம் வீசி அழிந்து போன அழகு பூவை பற்றி அனைவரும் அறிந்ததே.இந்த கோர நிகழ்வின் காரணத்தையும் ,அந்த கொடூரனுக்கு  என்ன  தண்டனை என்பதையும் வலைபூக்களிலும்  ,முகநூளிலும் அதிகமாகவே அலசிவிட்டனர்.

என்னால் முடிந்தது மட்டும் என்ன? எனது கொந்தளிப்பை கொட்ட வந்திருக்கிறேன்.

அந்த அழகு தேவதை பிறந்த அதே ஊரைச் சேர்ந்தவள் என்ற முறையிலும் , அவளை போன்றே சகோதரர் இல்லாது  இரு பெண்களில் ஒருத்தியாய் பிறந்து,உறவினர்கள் ஆதரவில்லாது வளர்ந்து, என் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த இருப்பத்தொரு வயதில் குடும்ப சுமையை கையில் ஏந்தியவள் என்ற முறையிலும் வினோதினியின் அனைத்து கனவுகளையும் என்னை அவளில் வைத்து நன்கே உணர்கிறேன்.

அதை விட அவர் தந்தை இன்று  என்னவெல்லாம்  இழந்திருக்கிறார், இனி அந்த குடும்பம் எப்படி ஒரு  வாழ்வை  வாழும்  என்பதையும்  நன்று  உணர்கிறேன். 

 வீட்டை காக்க வந்த குல தெய்வமாகத் தான் வினோதினி அவர் தந்தை நெஞ்சில்  வாழ்ந்திருப்பார்.அவளின் படிப்பை கொண்டு பெற்றவரின் பசி ஆற்ற ஆவலாய் இருந்தவள் இன்று அழிந்து விட்டாள்.சுரேஷ்க்கும் வினோதினிக்கும் என்ன நடந்தது அவர்கள் வீட்டிற்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதை எல்லாம் அங்கு அங்கு படித்ததை மட்டும் வைத்து  நான் எழுத விரும்பவில்லை..
 
எனது கேள்வியெல்லாம், நமது கலாச்சாரத்தில் பெண் பிள்ளைகள் மட்டும் இருக்கும் வீட்டில் தந்தை தவிர வேறு ஆண் இல்லை.ஆண் பிள்ளைகளை தேவையற்று வீட்டில் சேர்க்கவும் மாட்டார்கள்.அத்தை பையன், முறை மாமன் கூட  ஒரு வயதிற்கு மேல் வீட்டிற்கு அடிக்கடி வர முடியாது .
 
இப்படி இருக்க, தனக்கு காரணம் இல்லாமல்  எதற்கு ஒருவன் உதவி  செய்ய வேண்டும் என்று ஆராயாமல், தன்  வீட்டில் ஒருத்தனை எதற்கு சேர்க்க வேண்டும்.தொலைக்காட்சியில் கேட்ட வினோதினியின் தந்தை சொன்னதை 
வைத்து தான் இதை எழுதுகிறேன்.

சரி, உதவி என்பது எதிர்பார்த்து செய்வதில்லை , நல்ல மனம் கொண்டவர் என்று வினோதினி தந்தை நினைத்திருந்தால். அவர் தானே அவருக்கு நண்பராய் இருந்திருக்க வேண்டும்.வீட்டில் சேர்த்து விட்டு , நம்பி சேர்த்தேன்  என்று இன்று புலம்பி  பலன் இல்லை.
 
சக மனிதனை நேசிப்பதும்,நம்புவதும் ,வீடு தேடி வருபவனுக்கு விருந்து வைக்க முடியாவிட்டாலும்,கையில் இருப்பதை கொடுத்து அனுப்பும் அதே பண்பாடுடைய தமிழர்கள்  தான், வீட்டின் உள்ளே பெண் பிள்ளைகள் இருந்தால் வீட்டின் திண்ணையில் ஆண்களை  அமர கூட  விடமாட்டார்கள்.
 
மாறி வரும் உலகில், எல்லாம் நவீனமாகி, எது காதல் எது காமம்  என்று  தெரியாமல்  திண்டாடிக் கொண்டிருக்கிறது எம் இளையசமுதாயம். 

உங்கள் பெண் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரையில் கையிலே வைத்து காத்திடுங்கள். தனியாக  பெண்பிள்ளையை  வளர்ப்பவர்கள் அதிக கவனம் எடுங்கள், உங்கள் பெண் காதலிக்கவோ , காதலிக்கப் படவோ நீங்களே காரணமாகாதீர்கள்.

காதல் ஒரு தலையோ இரு தலையோ ஏமாற்றியவர்  ஆணோ பெண்ணோ, காதல் என்றும் அழிக்காது.தன்னை ஏமாற்றிய பெண் எங்கோ நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களும்,தன்னை ஏமாற்றி தாயும்  ஆக்கி  விட்ட பின் கூட, அவனை  அசிங்க  படுத்த  விரும்பாமல்  தன்னை  மறைத்து வாழும் பெண்களும் தான் அதிகம்  இந்த மண்ணில் .
 
 
இப்படி இருக்க தான் செய்த கொடூர செயலுக்கு, என்னை ஏமாற்றினாள்  பழி வாங்க செய்தேன். எனக்கு கிடைக்கவில்லை, யாருக்கும் கிடைக்க வேண்டாம் என செய்தேன்.என்  காதலை ஏற்கவில்லை என்னை அவமான படுத்தினால் அதற்காக செய்தேன் என்று ஒரு மனித மிருகம் சொல்லும் எந்த ஒரு காரணங்களையும் ஏற்க முடியாது.

ஒரு பெண்ணை ஒரு தலையாய் காதலிக்கும் ஆண் மகன்களே ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்த பின் மட்டுமே அவள் வீட்டை  பற்றி  யோசியுங்கள்.எந்த சூழ்நிலையிலும் ஒரு  பெண்ணை  கவர  வேண்டும்  என்ற எண்ணத்தோடு ஒரு  வீட்டிற்குள் நுழையாதீர்கள்..இதை விட அவர்களை விஷம் வைத்து கொன்று விடலாம்.

எந்த ஒரு தமிழ் சினிமாவையும் பார்த்து காதலில் தவறான வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். இதை சொல்லக் காரணம் நிறைய படங்களில் காதலிக்கும் பெண் வீட்டில் நுழைந்து அவளுடன் பழக முயற்சிப்பதாகவே காட்சிகள் சித்தரிக்கப் படுகின்றன.
 
வினோதினி வாயிலாகா இனி இப்படி ஒரு கொடூரம் வேண்டாம் என கேட்டுக் கொண்டு கனத்த மனதுடன் முடிக்கிறேன்.
 
பணிவுடன் ,
 
ஆதிரா 
 
 












 

Monday, February 11, 2013

அழகு

வெற்றி


கண்கள் பத்திரம்...ஐயோ சாமி!!ஒரு காண்டக்ட் லென்சுக்கு ஆசைப் பட்டு நான் பட்ட பாடு!!

நண்பர்களுக்கு வணக்கம்,

வலைப்பதிவு உலகில் எனக்கும் ஓர் இடம் கிடைத்து எழுத வந்துவிட்டேன் .எனது முதல் இடுக்கை என்பதால்,படிப்பவர் கண்ணில் படும் பிழைகளை மன்னித்தருளுங்கள்.என்  வாழ்வில் நடந்த ஒரு மறக்கமுடியாத நிகழ்வை, காலம் கற்றுதந்த பாடத்தை, சகமனிதரின் நலனில் அக்கறை கொண்டவளாய் ஒரு விழிப்புணர்வுக்காக எழுதுகிறேன்..

என் கல்லூரி நாட்கள் கல கல வென மகிழ்ச்சியாய் நகர்ந்த தருணம்   அத..நான்  புத்தக  புழுவாகவோ , இல்லை தொலைக்காட்சிப் பெட்டியின் தோழியாகவோ   இருந்ததில்லை.. இருந்தும்  என்  விழிகள் விரைவிலேயே  என் பார்வையைத் தூரமாகக் கொண்டு  சென்றுவிட்டது.

பிறகு என்ன??? மருத்துவரின்  ஆலோசனைப்படி மூக்குக் கண்ணாடி அணிந்து,  விலகிச் சென்றப் பார்வையை விரட்டி பிடித்து என் விழிகளில் அடக்கி விட்டேன் .நாம் நேசித்து ஏற்காத எந்த ஒரு பொருளும் நம்மிடம் நிலைக்காது  என்பது எத்தனை உண்மை!!. என் மூக்கு கண்ணாடியை முறைத்து முறைத்துப் பார்த்தே அதை அணிய விருப்பமில்லாமல், அறைக்குள் பூட்டிப்  பூஜை செய்தே என் பார்வைத் திறனை இன்னும் குறைத்துக்  கொண்டேன்.

ஒரு வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியில்   தொடுவில்லை (contact lens) அணிந்து கொள்ள முடிவு செய்தேன். அதன் தொடர்சியாக ,வீட்டில்  அடம் பிடித்து, வாங்கித்தருகிறேன் என்று சம்மதமும் சொல்லிவிட்டார்கள்.மருத்துவரைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வைத்திருந்த நேரத்தில், நான் ஒரு நாள் கல்லூரிக்கு 
இரு சக்கர வண்டியில்  சென்று இருந்தேன்.

கல்லூரி இருப்பது கடற்கரை அருகில் என்பதால்  போகும் வழியெல்லாம்   பலத்த காற்றின் ஓசையும்  கடல் அலையின் மெல்லிய இசையும் கேட்டு கொண்டே இருக்கலாம்.அன்றும் அப்படியே ஒரு பலத்த காற்றில் மணல்  பறந்து வந்து கண்களில் பட்டதாய் ஓர் உணர்வு.வண்டியை நிறுத்தி, கண்களை துடைத்து விட்டு, மீண்டும் புறப்பட்டு கல்லூரி சென்று வீடு திரும்பிவிட்டேன்.

கண்களில்  இருந்த உருத்தல் மட்டும் சரியாகவில்லை.அதுவே சரியாகி விடும் என்று விட்டுவிட்டேன் .ஒரு வழியாக, மருத்துவரை பார்க்கும் நாளும் வந்தது.

காண்டக்ட் லென்ஸ் அணிய வேண்டும் என்று மருத்துவரிடம் விளக்கிய போது, என் அம்மா கண்களில் ஏதோ தூசி பட்டு உருத்துவதாய் சொல்கிறாள் என்றார். மருத்துவர் உடனே கண்களை ஒரு முறை சுத்தம் செய்து கொள், பின் லென்ஸ் அணியலாம் என்றார்.அதற்காக ஒரு சொட்டு மருந்து தருவதாகவும் சொல்லி மருந்து எழுதிக் கொடுத்தார்.

மருந்தை வாங்கி கொண்டு வீடு திரும்பினோம்.இரவு அந்த சொட்டு மருந்தை போட்டு விட்டு உறங்கினேன்..இனிதே விடியல் வந்தது. கண்களை திறந்தேன்.கண்களில் இருந்த உருத்தல் நின்ற பாடில்லை. சரியாகும் என்று காத்திருந்தபடியே சொட்டு மருந்தை மீண்டும் 
உபயோகித்தேன்..மறுநாளும் விடிந்தது..கண்களில் மாற்றம் இல்லை மாறாக  
இன்னும் மோசமானது.அதிகப்படியான எரிச்சலை உணர்ந்தேன்..மனது மட்டும் சற்றே என்னை பயமுறுத்தியது உன் கண்களுக்கு ஏதோ ஆபத்து என்று..

வீட்டில் சொன்னால் ஒரு வரும் காதில் வாங்குவதாய்  இல்லை..காரணம் நான் ஒரு சீக்கு கோழி.அடிக்கடி நோய்வாய்ப் படுவதும் பின் அதுவே சரியாவதும் எனக்கு பழக்கமான ஒன்று..அதனால், நான் ஏதொ கல்லூரிக்கு மட்டம் போட காரணம் தேடுவதாய் நினைத்து விட்டனர் என் வீட்டார்.

இப்படியே இரண்டு  நாட்கள் நகர்ந்து விட்டது..மருத்துவர் என்னை தலைக்கு குளிக்க வேண்டாம், கண்ணில் எதுவும் படாமல் பார்த்து கொள்ளும் படி ஆலோசித்திருந்தார் ..

நான் விடுவேனா, அந்த கண் எரிச்சலிலும் அம்மா சொல்ல சொல்ல கேட்காமல் தலைக்கு குளித்துவிட்டேன்..அவ்வளவு தான்...கண்களின் எரிச்சலும் வலியும் உச்சகட்டத்தை    அடைந்தன. என்னால்  தாங்க  முடிந்த  வலியின்  அளவை தாண்டி விட்டதாலோ என்னவோ, கண்களை  திறக்கவே  முடியாமல்  கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய  ஆரம்பித்து  விட்டேன். கண்களை  மூடி  இருந்தால் மட்டுமே என்னால் இருக்க  முடிந்தது. சற்று  மிதுவாய்  கூட  திறக்க  முடியவில்லை.

என் வீட்டில்,அப்போது தான் நம்பினார்கள் எனது வலியை.என் அம்மா தூசி  தான் இன்னும் கண்ணுக்குள் இருக்கோ என்று ,இரு கண் இமைகளையும்    விரித்து  பிடித்து ஊதிவிட்டார். என் அழுகை இன்னும் பத்துமடங்க்காயிற்று.  கண்களை மூடிய படியே கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது.

பொதுவாக கண்களின் தூசிக்கோ வேறு சில பிரச்சனைக்கோ தாய்ப்பால் ஊற்றினால் உடனே சரியாகும் என்பது என் அம்மாவின் நம்பிக்கை, எங்கள் தெருவில் ஒரு தாயிடம் பால் வாங்கி வந்து அதையும் செய்துவிட்டார்கள் பலனில்லை .

 எங்கள் ஊரில் அதிக கண் மருத்துவரோ,மருத்துவமனையோ இல்லை. சுத்தி சுத்தி நாங்கள் அரசு மருத்துவமனைக்கோ இல்லை அங்கு பணிபுரியும்  மருத்துவர் மாலையில்   பார்க்கும்  தனியார்  மருத்துவ கூடத்திற்கோ தான்  செல்ல  வேண்டும்.

என் அழுகையை பார்க்க முடியாத என் சகோதரன் அரசு மருத்துவமனை சென்று நாங்கள் பார்த்த அந்த மருத்துவர் இருக்கிறாரா என்று பார்த்து வந்தான்.அங்கிருந்த கூட்டத்தில் நிச்சயம் இப்போதைக்கு பார்க்க முடியாது என்று தெரிந்து வந்தான்.

ஒரு வழியாக  மறு நாள் இரவு அதே தனியார் கூடத்தில் அதே மருத்துவரை பார்த்தோம்.என் கண்கள் மூடிய படியே தான்  இருந்தன. திறந்தால் வலிக்கும் என்று நான் திறக்கவே இல்லை.மனது நிறைய கேள்விகள் வேறு, மருத்துவர் என்ன சொல்லுவாரோ??எதனால் இப்படி ஆனதோ?தலைக்கு குளித்தது  அவ்வளவு பெரிய குற்றமா? கண்கள் தெரியாமல் போயிடுமோ?அம்மாவிடம் அவர் தலைக்கு குளித்தது தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டால்!!!வீட்டில் எல்லாரிடமும் அடி வாங்க வேண்டி வருமே..அரண்டவன் கண்ணுக்கும் இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்காய் ஆகிவிட்டது.

சரி மருத்துவர் அப்படி என்ன தான் சொல்கிறார் என்று பார்ப்பதற்கு காத்திருந்தேன்.என் அம்மா வாயை திறந்து முதலில் சொல்லியது."டாக்டர் நீங்க தலைக்குலாம் குளிக்க வேண்டாம்னு தான சொன்னிங்க..இவ எங்க கேட்ட இப்ப கண் எரியுது என்கிறாள்". 

என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.மருத்துவர் கண்களில் ஒளி அடித்து  பரிசோதித்துவிட்டு  அதிர்ந்து  போனார்.உன் கண்கள் இரண்டும் கொத கொத வென புண் ஆகி வெந்து போய் இருக்கிறது.நீ ஏன் தலைக்கு குளித்தாய் என்று கேட்டு கொண்டே இருக்கையில், என் அம்மா அவர் கொடுத்த மருந்து சீட்டையும், சொட்டு மருந்தையும் எடுத்து மேசை மீது வைத்தார்.

மருந்தை பார்த்து மீண்டும் அதிர்ந்தார்,மருந்தை கையில் எடுத்து இதையா கண்களுக்கு போட்டீர்கள் என்று எங்களை பார்த்து கேட்கிறார்.அட கடவுளே!!!என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.அந்த கிளினிக் யை சேர்ந்த மருந்து கடையில் தான்  மருந்து வாங்கினோம் என்பதால் கடையில் இருந்தவரை அழைத்து உங்கள் விருப்பத்திற்கு மருந்து கொடுக்க, நான் ஏன் இங்கு மருத்துவன் என்று ஒருவன் இருக்கிறேன் என்று மட்டும் கேட்டு அனுப்பிவிட்டார்.பின், எனக்கு மாற்று மருந்துகள் எழுதி கொடுத்தார்.

கண்களுக்கு கொஞ்சமும் ஒப்பாத மருந்தை (high dose) போட்டதால் கண்கள் புண்ணாகி இருக்கிறது,வெந்த புண்ணில் வேதியல் கலவை(ஷாம்பூ) பட்டவுடன் இன்னும் அதிகமாய் புண்ணாகி அப்படி ஒரு வலி வந்திருக்கிறது.

இம்முறையும் நாங்கள் மாற்று மருந்தை அதே கடையில் தான் வாங்கினோம்.வேறு கடைக்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்கு தோனவும்  இல்லை.நாங்கள் அவர்களிடம் எதிர்பார்த்தது  "தெரியாமல் நடந்து விட்டது" என்ற  ஒரு  கண்ணிய  வார்த்தையை  தான். அதற்கு  கூட  மனமில்லாமல்  இறுகிய   முகத்துடனே மருந்தை தந்தனர்.

மாற்று மருந்து போட்டு ஓரிரு நாட்களில் என் கண்கள் பழைய நிலையை அடைந்து,நான் கல்லூரி சென்றேன்.நிகழ்வு நிறைவுக்கு வந்தது.


 இதில் இருந்து நான் கற்ற முதல்  பாடம். பார்வை எவ்வளவு அவசியம் என்பதும் ,பார்வை அற்றவரின் வேதனை என்னவாக இருக்கும் என்பதும்.
இதை விட பெரிய பாடம், நாம் செய்யும் சிறு அலட்சியமோ,நாம் சொல்லும் சிறு வார்த்தையோ, நமக்கு வரும் சிறு கோவமோ,நாம் எடுக்கும் சிறு முடிவோ, எல்லாம் எத்தனை சின்னதாக இருந்தாலும், அவை சக மனிதரின் வாழ்வில் ஒரு நொடியேனும் இன்னலைத் தருமெனில், நாம் செய்யும் பாவங்களில் பெரிய பாவம் அதுவே ஆகும்.

அன்று மட்டும் மருந்து இல்லை நாளை வாருங்கள், இந்த மருந்து இல்லை வேற தரட்டுமா, வேறு கடையில் கேட்டு பாருங்கள் என்று ஏதேனும் ஒரு பொறுப்பான பதிலை கடைக்காரர் சொல்லி இருந்தால் அப்படி ஒரு அவஸ்தை இல்லை எனக்கு.எதை கொடுத்தால் என்ன? இவர்களுக்கு தெரியவாப் போகிறது.நியாயம் தான் எனக்கு என்ன மருந்துசீட்டை பார்த்து அதில் இருக்கும் மருந்தை தான் கொடுத்தாரா என்று தெரியவாப் போகிறது.

ஆனாலும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும், மண்ணில் நடக்கும் பல    விஷயங்கள்  மனித மனங்களின்  மேல்  கொண்ட நம்பிக்கையில் 
தான் நடக்கிறது.. இது ஏனோ அவருக்கு தெரியவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து இதை இன்று எழுதுவதற்கான காரணம், இன்னும் இது போன்ற நிகழ்வுகள் எங்கேனும் ஒரு மூலையில்  நடந்து கொண்டே தான் இருக்கின்றன.பாதிப்புகள் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்து கொண்டே தான் இருக்கின்றன.கவனமாய் இருங்கள்,சின்ன மாத்திரை வாங்கும் விசயமாக இருந்தாலும்...

நேரம் எடுத்து இதனை படித்தவர்க்கும் பகிர்ந்தவருக்கும்  என் நன்றிகள்.

பணிவுடன்,

ஆதிரா 



Friday, February 8, 2013

காதல் கைதி


அவன் கைகள் அன்புச் சிறையானால்

ஆனந்தமாய் ஆயுள் தண்டனை ஏற்று

அடைந்துக் கிடக்கும் என் இதயம்..

- ஆதிரா

மழலை


Sunday, February 3, 2013

இனி ஒரு விதி செய்வோம்


 
 
 
 
 
தனம் இருப்பவனெல்லாம்
 
தானம் செய்துவிட்டால் 

தரணியில் இல்லாதவன் என்றோர்

இனம் இருக்கப் போவதில்லை..

கற்றவன் எல்லாம்

கல்வியை விற்காவிட்டால் இங்கு

கல்லாதவன் என்றோர் குலம் 

இருக்கப் போவதில்லை..

அன்பு கொண்ட நெஞ்சங்கள் எல்லாம்

அனைவரையும் ஆதரித்துவிட்டால் இங்கு

அனாதை என்றோர் அவலம் இருக்கப் போவதில்லை..

புனிதராய் வாழ வேண்டாம்..

மனிதராயாவது வாழ்வோம்

மண்ணோடுப் போகும் வரை...

- ஆதிரா.

பெண்


Saturday, February 2, 2013

மணமேடை

 
 
மனதால் மாலையிட்டுப் பின்
மணவறையில் அமருங்கள்
இல்லையெனில்
மணவறையில் அமர்ந்த பின்னாவது
மனதால் மாலையிட்டுக் கொள்ளுங்கள்
 
வெறுமனமாய் ஒரு திருமணம் செய்து பின்
வெறுப்பு வந்ததென்று விலகிச்செல்ல
நீங்கள் ஒன்றும்
 
கட்டி வைத்து கட்டவிழ்த்து ஓடும்
மாடுகள் அல்ல இது ஒன்றும்
மாட்டுத் தொழுவமும் அல்ல...
 
அணு அணுவாய் செத்து மடிவீரோ இல்லை
அனுதினமும் சிரித்து மகிழ்வீரோ இரண்டையும்
இன்பமாய் ஏற்று இணைந்தே இருங்கள்..
 
 
 
 - ஆதிரா