Thursday, May 23, 2013

ஏதொ தெரியாத் தனமாக் கிறுக்கிட்டேன்..வந்துக் கொஞ்சம் படிங்களேன் ப்ளீஸ்..




ஓர்  மாலை மஞ்சள் நேரத்திலே 
மாமரத் தோப்பினிலே 
மாங்குயில் இசைக்கையிலே 
மாமனவன்  அருகினிலே 
மங்கை இவள் நாணத்திலே 
மயங்கி நின்றால் மனதினிலே 

மண்ணைப் பார்த்து நின்றவளை 
மனக் கண்ணில் எடைப் போட்டவன் 
அவள் மல்லிகைப் பூ வாசத்திடம் 
மனமே நீ சிக்கிடாதே என மனதுக்குள் 
நொந்துக் கொண்டான் மெல்ல உள்ளே 
சிரித்துக் கொண்டான்..

தடைப் போட்ட வெட்கத்தை 
தள்ளிக் கொஞ்சம் வைத்தவள் 
தன் மன்னவன் முகம் பார்க்க 
மைவிழி ஏரெடுத்து  அவன் 
மௌனம் .களைய முறையிட்டாள்..

மௌனம் கலைந்த மன்னவன் 
முல்லை பூ சிரிப்புடன் முதலில் 
முனைந்தான் கேள்வி ஒன்றை..

என்ன இன்று  பகலில் நிலவு?
என்னருகிலேயே!! அதுவும் 
இவ்வளவு நெருக்கத்தில்..!!

சின்னதொரு புன்னகையில் 
சிட்டாய் அவள் பதில் சொன்னாள்.
ஒளி கொடுத்தச் சூரியனுக்கு ஒரு 
தினமேனும் நன்றி சொல்ல 
இந்தத்  திங்கள் இன்று  பகலில் 
வந்தேன்..

உன்  இதழால்  சொல்லும் வார்த்தை விட 
எழுதும் வார்த்தை எத்தனை அழகென்று 
நீ அறிவாயா?

ஒரு முறை எழுதிவிட்டுச் செல்..
மறு முறை இந்த நிலவு  தரிசனம் 
தரும் வரையில் நித்தம் படித்து 
நெஞ்சுக்குள் பூத்திருப்பேன்..

அச்சம் வந்து அவளைக் கொல்ல 
அப்படியே நின்றிருந்தாள்..
அவள் வார்த்தை எழுதக்  காத்திருந்தவன் 
அருகில் வந்துக்  கைபிடித்தான்..

வேங்கை அவன் கைப் பட்டதும் 
மங்கை அவள் சிவந்துப்  போக 
அவள் சிவப்பழகை பார்த்திட்ட 
மஞ்சள் வெயில் மேகம் கொஞ்சம் 
கோபம் கொண்டுக்  கருத்துப் போக 
கார்மேகம் வந்துச் சூழ்ந்துக் கொள்ள 
கண்சிமிட்டும் நேரத்தில் மழை வந்து 
கலைத்திட்டது அவன் பெற 
இருந்த வார்த்தையை....

Sunday, May 12, 2013

பிடிக்கிறது.......ரொம்பப் பிடிக்கிறது...







பிடிக்கிறது..என்னை மட்டுமே  பிடிக்கிறதென்னும் உன் பிடிவாதம்  ரொம்பப் பிடிக்கிறது...


பிடிக்கிறது..என்னை அழகியென்று வர்ணிக்கும் 
உன் பொய்கள் ஒவ்வொன்றும் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னை அழவைக்கும்  உன் வார்த்தைகள் வார்த்த வலி ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னைச் சிவக்க வைக்கும் உன் சில்லென்ற சில்மிஷங்கள் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என்னைத் தோள் சாய்த்து தோல்வி பயம் நீக்கும் உன் தோள்கள் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது.. நீ கடந்துச் செல்லையில்  என்னைக் கடத்திச் சென்ற ஓரக்கண் பார்வை ரொம்பப்  பிடிக்கிறது..


பிடிக்கிறது..பெரியச் சண்டைக்குப் பின் சிந்திடும் உன் சின்னப் புன்னகை ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..என் பேசா மௌனத்தையும்  மொழி பெயர்க்கிற உன் புரிதல் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..பிடித்தவளுக்காக உனக்குப் பிடித்ததைக்  கூட நீ விட்டுக் கொடுப்பது ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..அருகில் இல்லாத போதும் என் நினைவுகளை ஆழமாய் சுமக்கும் உன் நெஞ்சம் ரொம்பப் பிடிக்கிறது..


பிடிக்கிறது..இன்னல் தான் வாழ்க்கை என்றாலும் என்னை இழக்கும் எண்ணமில்லாத உன் உறுதி ரொம்பப் பிடிக்கிறது...

அந்த இரண்டு வார்த்தைகள் எவை ??




அவனுக்கும் எனக்குமான உறவைச் சொல்லிடும் வார்த்தை..

அவனுக்கும் எனக்குமான நெருக்கத்தைச் சொல்லிடும் வார்த்தை..

அவனுக்கு என் மீதான உரிமையைச் சொல்லிடும் வார்த்தை..

அவனால் என் ஒருத்திக்கு மட்டுமே தரப்படும் வார்த்தை ..

அவன் ஒருவனிடம் இருந்து மட்டுமே நான் பெற்றுக் கொள்ளும் வார்த்தை..

அவன் காதல் மொழியையும் ,அதட்டல் மொழியையும் 
அறிந்திட உதவும் வார்த்தை..
.
.
.
.
.

அட அது வேற ஒன்னுமில்லைங்க..." வாடி போடி "






Thursday, May 9, 2013

தமிழக அரசே மாற்றி அமைத்திடு உன் மண்ணாங்கட்டி தேர்வு முறையை!!





இந்தியாவின் இன்றைய கல்வி முறையில் அதிகம் உடன்பாடு இல்லாமல் அதிருப்தியுடன் இப்படி ஒரு பதிவை எழுத காத்திருந்தேன் .பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த சமயத்தை இப்போது பயன் படுத்திக் கொண்டேன்.

கனா கண்கிறேனின் முதன்மையான சமுதாயக் கனவு இந்தியாவில் குறிப்பாக தமிழக கல்வி முறையில் நிச்சயம் ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதே.

எனது இந்தப் பதிவின் நோக்கம் நமது கல்வி முறை வெறும் ஓட்டப் பந்தயக் குதிரைகளை மட்டுமே உருவாக்குது அதையும் அரசு பொதுத் தேர்வு என்ற முறையில்..எங்கே இருக்கிறது உங்கள் பொது..

எதைக் கொண்டு மதிப்பெண் முறையில் 100 வாங்கியவன் புத்திசாலி எனவும் 60 வாங்கியவன் சராசரி  எனவும் தீர்மானிக்கிறீர்கள்.அறிவியலில் 100 மதிப்பெண் வாங்கியவனைக் கூட ஒரு சுவர் கடிகாரம் எந்த முறையில் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது என்றுக் கேட்டால் கூட விவரிக்கத் தெரியாத ஒரு கல்வியைத் தானே கொடுத்திருக்கிறீர்கள்.

கடந்த வருட விடைத் தாள்களை கரைத்துக்  குடித்து அதை தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண் வாங்கி வெற்றி பெற்றுவிட்டால் கொண்டாடுகிறீர்கள்.
பாடம் புரிந்தால் மட்டுமே படிக்க இயலும் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அடுத்தவருடன் ஒப்பிட்டு பேசி அவனைப் பற்றி அவனுக்கே தாழ்வு மனப்பான்மை உண்டு பண்ணிவிடுகிறீர்கள்.

இதயெல்லாம் கூட நான் பொறுத்துக் கொள்வேன்.பறக்கும் படை என்ற பெயரில் பயமுறுத்துகிறீர்களே அதை மட்டும் பொறுக்க முடியவில்லை.

இந்தியாவில் படிப்பைக் தொடர முடியாமல் கைவிடுவதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான்.ஒன்று ஏழ்மை இன்னொன்று தோல்வி.ஏழ்மையிலும் எத்தனையோ மாணவர்கள் சாதிக்கிறார்கள்.அவர்களுகெல்லாம் பண உதவி மட்டும் போதாது தேர்வு முறையை எளிதாக்கியும் உதவிட வேண்டும்.தேர்வு முறைகள் மாறினால் தேர்ச்சிகள் எளிதாகும்.

எதனைக் கொண்டு இதனை பொதுத் தேர்வு என்று சொல்லுகிறீர்கள்???

"பொது" என்ற வார்த்தையின் அர்த்தமென்ன??,அனைவருக்கும் பொதுவான முறையில் இருக்க வேண்டும்.பாரபட்சமில்லாமல் ஊழலில்லாமல் அவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்பது தானே.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான முறையில் தானே மாணவர்கள் தயார் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அப்படியா நடக்கிறது தமிழ் நாட்டில்??

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் பள்ளியால் கடுமையான கேள்விதாள்களுக்கு பதிலளிக்கும் முறையில் தயார் செய்யப் படுகின்றனர்.உதாரணமாக நான் படிக்கும் காலத்தில் என் பள்ளிக்கு கேள்வித் தாள்கள் பாளையங்கோட்டையில் இருந்து வரும்.பள்ளியில் நடத்தப்படும் எல்லா தேர்வுகளும் கடுமையாக இருக்கும். அவற்றில் நாம் 60 சதவிகிதம் எடுத்துவிட்டால் போதும் பொதுத் தேர்வில் 80 எடுத்து விடலாம்.இதன் அடிப்படையில் தான் தனியார் பள்ளி மாணவர்கள் வெல்கிறார்கள்.

அரசு பள்ளிகளில் படிப்போர் ஒரே மாதிரியான எளிதில் அவர்கள் பள்ளியிலேயே அவர்கள் ஆசிரியரால் தயார் செய்யப் படும் கேள்வித் தாள்களுக்கு விடை அளிக்கிறார்கள்.அதனால் எப்போதும் ஒரே நிலையில் இருக்கிறது அவர்களின் மதிப்பெண்கள்.

இப்படி வெவ்வேறு முறையில் மாணவர்களை தயார் செய்து, பந்தயத்தில் ஓட விடுவது,தயிர் சாதம் சாப்பிடறவன பாத்து மாமிசம் சாப்பிடறவன் குஸ்தி க்கு வரியான கூப்பிட்ட கதையா இருக்கு.

எப்போது மாறும் இந்த நிலை..தமிழ் வழியே அரசு பள்ளியில் படித்து தானே அப்துல் கலாம் சாதித்தார்.அந்தக் காலத்தில் எல்லாம் 8 ஆம் வகுப்பு படித்தால் போதும் ஆசிரியர்  ஆகி விடலாம்.இப்பொது அதற்கும் M.Ed வரை படிக்க வேண்டி உள்ளது.

வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்றார் போல் பாடங்கள் மாற வேண்டும்  சொல்லித் தரப்படும் முறையும் தேர்வு முறைகளும் மாறவேண்டும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகை அந்நாட்டின் மிகப் பெரும் பலம்,அது ஒரு போதும் பலவீனம் இல்லை.நம் மக்கள் தொகையின் படி நாம் இந்நேரம் ஆயிரம் அப்துல் கலாமை பெற்றிருக்க வேண்டும்.

கரைத்துக் குடிக்காமல் எதை கேட்டாலும் திருக்குறள் போல் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கல்வி கிடைத்தால் நாம் நிச்சயம் ஆயிரம் கலாமை பெறுவோம்.

தோல்விகளை தூக்கி பேசியதால் நான் அதிகம் தோல்வி கண்டவள் என்று நினைக்க வேண்டாம்.

பத்தாம் வகுப்பில் 90.8 விழுக்காடும், பன்னிரெண்டாம் வகுப்பில் 85 விழுக்காடும் பெற்றிருந்தேன். இந்தப் மதிப்பெண் பெற நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை.படிப்பதற்கான சூழ்நிலையை என் வீடு எனக்கு எப்போதும் தந்ததில்லை.வகுப்பை முடிந்த அளவு கவனித்து விடுவேன்.அதை தாண்டி என் கையெழுத்து எனக்கு கொஞ்சம் கை கொடுத்தது.

பொதுவாக பெண்கள் எல்லாம் படிப்ஸ் என்பார்கள் .நான் நேரெதிர் , ஆண்களுக்கு இணையாய் விளையாட்டுப் புத்தியுடன் இருப்பேன்.தேர்வின் முதல் நாள் நான் டிவி பார்த்தாலும் பார்க்காதே ஐயோ போச்சு அம்மா போச்சு என்று என் பெற்றோர் ஒரு நாளும் கத்தியதில்லை.

அதன் பின் ,பொறியியல் இளங்கலையை இந்தியாவில் முடித்து பேற்படிப்பை பிரான்சின் முன்னனி அரசு  பல்கலைகழகத்தில்  தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடன் படிக்கும் எல்லோரும் இங்கேயே பிறந்து வளர்ந்து அவர்கள் கல்வி முறையில் படித்தவர்கள்.அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கான அடித்தளத்தை நான் பெறவில்லை.இருந்தும் நான் துவண்டு போகாமல் முண்டி அடித்து வென்றுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம். "பந்தயம் இல்லை, இது முதல் குதிரை இது இரண்டாம் குதிரை என்றப் பேச்சில்லை.அவன் படிக்கிறான் உன்னால் ஏன் முடியவில்லை என்ற கேள்வி இல்லை,மற்ற மாணவர் முன் கேள்வி கேட்டு என்னை அசிங்கப் படுத்துவதில்லை.தெரியவில்லை என்ற பதிலை நான் தைரியமாக சொல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.எனக்கு பயமில்லை".

பக்கம் பக்கமா பதிலளிக்கும் கேள்விகளைத் தவிர்த்து பாடத்தின் நடை முறை பயன் பாட்டை அறியும் படி கேள்வி கேட்டால், எந்த ஒரு பாடமும் புரிந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும், என்ற ஒரு தேர்வு முறையைத் தான் நான் கனவு காண்கிறேன்.தேர்வுகள் நடப்படுவதின்  முக்கிய நோக்கம் மாணவன் பாடத்தை புரிந்திருக்கிறானா ??என்று ஆராய்வது மட்டுமே.இதனைத்  தாண்டி வேற எந்த நோக்கமும் என் அறிவுக்கு எட்டவில்லை.

அன்புடன்,
ஆதிரா.


நன்றி ம்மா , நன்றி ப்பா







1) என் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைத்து என்னையும் ஒரு பொம்மையைப் போல் வளர்க்காததற்கு நன்றி..


2) நான் கேட்டதை விட அதிகமாக என் கையில் திணிக்காமல் ஏனைய நேரங்களில் இல்லை என்ற பதில் தந்ததற்கு நன்றி..


3) நான் எங்கு செல்கிறேன் யாருடன் பேசுகிறேன் என்று கவனித்து வளர்த்ததற்கு நன்றி..


4) என் முகம் கொஞ்சம் சுருங்கிட்டால், உடனே அதன் காரணம் அறிய முயர்ச்சித்ததற்கு நன்றி..


5) பள்ளி முடிந்து வந்தால் படி படி என்றென்னை கொடுமை செய்யாமல் இருந்ததற்கு நன்றி..


6) டிவி பார்க்க கூடாது , யாருடனும் பேசக் கூடாது என்றென்னை சிறையில் அடைத்து பத்தாம், பனிரெண்டாம் பொதுத்தேர்விற்கு தயார் செய்யாததற்கு நன்றி..


7) படிப்பு விடயத்தில் என்னை என் போக்கிற்கு விட்டு வளர்த்ததற்கு நன்றி..


8) ஒன்றாய் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தந்ததற்கு நன்றி..


9) நீ இதை கற்றுக் கொள் அதைக் கற்றுக் கொள் என்று எப்போதும் ஆலோசனை சொல்லி சொல்லி எனக்கு வெறுப்பை உண்டாக்காமல் வாழ்க்கைப் பாடத்தை மட்டுமே கற்றுத் தந்ததற்கு நன்றி..


10) சைக்கிள் முதல் scooty வரை ,சமையல் முதல் வீட்டு வேலை வரை எல்லாவற்றையும் நானே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளுவதை தூரமாய் நின்று ரசித்ததற்கு நன்றி..


11) என் விருப்பம் போல் உடையணிய என்னை அனுமதிக்காததற்கு நன்றி..


12) ஒரு வயது வரை என்னை அடித்து உதைத்து வளர்த்ததற்கு நன்றி..


13) நான் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரை என் கைகளை இறுக்கப் பிடித்திருந்தமைக்கு நன்றி..


உங்களின் இல்லை என்ற பதிலால் இன்று எது கிடைக்காவிட்டாலும் நான் அழுவதில்லை.இன்று நான் எதுவாய் இருக்கிறேனோ அது உங்கள் வளர்ப்பினால் தரப்பட்டது..


நன்றி ம்மா , நன்றி ப்பா.